கல்பாக்கம்: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க, முட்டுக்காடு பகுதியில் பெரிய அளவில் முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீருடன் மழைநீர் கடலில் கலக்கிறது. கடற்கரையில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் ஏராளமான செடி, கொடிகள் கடலில் கலந்துள்ளன. பாசிகளும் செடிகளும் கொடிகளும் கடலுக்குள் ஆழமாக குவிந்துள்ளன.
மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், கடலூர் சின்னக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடலில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் மீனவர்கள் மீன்பிடி வலைகளை கடலில் வீச முடியாமல் தவித்து வருகின்றனர். வலை வீசினாலும் கழிவுகளில் சிக்கி மீன்பிடி வலைகள் சேதமடைவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.