தஞ்சாவூர்: தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை காவிரி டெல்டா மாவட்ட மக்கள் பயன்பெற ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.
காவிரி டெல்டா பகுதியில் காரணமறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோயை’ (CKDu) எதிர்கொள்ள விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை திட்டத்தை தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை தொடக்கி உள்ளது.
காவிரி டெல்டா பகுதியில் காரணமறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான காரணிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும், விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்நோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
சர்க்கரை நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற வழக்கமான காரணங்கள் ஏதுமின்றி ஏற்படும் இந்தச் சிறுநீரக நோய், விவசாயத் தொழிலாளர்களிடையே அதிகளவில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. சிறுநீரக ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதிக வெப்ப அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறியவும், விவசாயிகளுக்கு அடிப்படைப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் ஒரு சிறப்பு மருத்துவக் குழுவை இம்மருத்துவமனை இத்திட்டத்தின் கீழ் களமிறக்குகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒரு ஆண்டுக்குள் காவேரி டெல்டா பிராந்திய மாவட்டங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சிறுநீரக நோய்க்கான பரிசோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
2026-ம் ஆண்டு உலகச் சிறுநீரக தினத்தை முன்னிட்டுத் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடையே CKDu குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது. காவேரி டெல்டா பகுதியில் சுமார் 600 விவசாயிகளிடம் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், சுமார் 2% பேருக்கு இந்தப் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், பல்வேறு ஆய்வுகளின்படி நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளில் கணிசமானோர், காரணமறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோயின் வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் எஸ். கௌரிசங்கர் கூறுகையில், “உலக அளவில் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு CKDu ஒரு முக்கியக் காரணமாக உருவெடுத்துள்ளது. இந்நோய்க்கான வழக்கமான காரணங்கள் இல்லாத விவசாயத் தொழிலாளர்களை இது பாதிப்பது பெரும் சவாலாக உள்ளது. எந்த அறிகுறியும் இல்லாமல் முற்றிவிடும் நிலையில் தான் இந்நோய் பொதுவாக கண்டறியப்படுகிறது. அதிக வெப்ப அழுத்தம், நீர்ச்சத்து குறைபாடு, விவசாய ரசாயனங்கள் பயன்பாடு, மாசடைந்த நீர் மற்றும் மருத்துவ வசதிகளைப் பெறுவதிலுள்ள சிரமங்கள் ஆகியவை இதற்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சமூக விழிப்புணர்வு, ஆரம்பக் கட்டப் பரிசோதனை மற்றும் தீவிரக் கண்காணிப்பு மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே எங்கள் நோக்கமாகும். கொள்கை வகுப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்டு, சிறுநீரக நோயின் தாக்கத்தைக் குறைத்து, ‘அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம்’ என்ற இலக்கை அடைய முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.
உலக அளவில் 85 கோடிக்கும் அதிகமான மக்களை நாள்பட்ட சிறுநீரக நோய் பாதித்துள்ளது. இதில் சர்க்கரை நோய்க்கு (24.9%) அடுத்தபடியாக காரணமறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய் (19.5%) இரண்டாவது முக்கியக் காரணமாக உள்ளது.
சிறுநீரகத்தைப் பாதுகாக்க, இரத்தச் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பது, சுறுசுறுப்பாக இருப்பது, உப்பு குறைவான சமச்சீரான உணவை உண்பது மற்றும் உடல் எடையைச் சரியாகப் பராமரிப்பது அவசியம். போதுமான தண்ணீர் குடிப்பது நச்சுக்களை வெளியேற்ற உதவும். புகைப்பிடிப்பதையும், மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் ஐபுபுரூஃபன் போன்ற வலி நிவாரணி மருந்துகளை அளவுக்கதிகமாக பயன்படுத்துவதையும், தவிர்க்க வேண்டும்.
சீரம் கிரியேட்டினின் மற்றும் GFR போன்ற இரத்தப் பரிசோதனைகள் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளை குறித்த காலஅளவுகளில் மேற்கொள்வது அவசியம். நோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் சிறுநீரக செயல்பாட்டுக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டிய தேவையைக் குறைக்கலாம்” என்று மருத்துவமனையின் சீறுநீரகவியல் நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
முதலமைச்சர் காப்பிட்டுத் திட்டத்தின்கீழ் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை தரசான்றிதழ் பெற்ற டெல்டா பகுதியில் ஒரே தனியார் மருத்துவமனையாகும். மேலும் அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியம் காப்பீட்டு திட்டத்திலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் வி. பிரவீன், சிறுநீரகவியல் இணை ஆலோசகர் டாக்டர் எஸ். கேதார கௌரி ஆகியோர் உடனிருந்தனர்.