சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு மத்திய மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது கடும் கண்டனத்துக்குரியது. மீன் பிடித்து அவர்களது 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர். மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் தமிழக மீனவர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், படகுகள் பறிமுதல் செய்வதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தமிழக மீனவர்கள் பிரச்னையில் இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு நல்ல தீர்வு காண இலங்கை அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கவில்லை.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு, மீனவ மக்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளனர். எனவே, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
மேலும், தமிழக மீனவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்படாத வகையில் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.