சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு அவசர கூட்டத்தை நடத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், அவர்களில் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது. மீனவர்கள் பிரச்னை தொடரக்கூடாது. எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரையும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீட்டு, இதுபோன்ற கைது நடவடிக்கை தொடராமல் இருக்க இலங்கை அரசிடம் அவசரக் கூட்டம் நடத்தி நல்ல தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
தமிழக மீனவர்களின் பிரச்சினை. மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் போதிய பாதுகாப்பை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இதனை அவர் வலியுறுத்தியுள்ளார்.