தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தமிழகத்தில் நடந்துள்ள டாஸ்மாக் முறைகேட்டை மன்னிக்க முடியாது என்று கூறினார். டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து தமாகா சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விடியல் சேகர், பொதுச் செயலாளர் ஜி.ஆர். வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் சிலர் கழுத்தில் மதுபாட்டில்களை மாட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஜி.கே. வாசன் கூறியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஒரு அறிவிப்பை வெளியிட்டாலும் தமிழகத்தில் சீட் எண்ணிக்கை கூடுமே தவிர குறையாது.

ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டிய பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி கவனத்தை திசை திருப்ப முயல்கிறது தி.மு.க. தமிழகத்தில் மொழிப் பிரச்னை 60 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பிரச்னைகளை கையில் எடுத்துக்கொண்டு, மத்திய அரசை திமுக குற்றம் சாட்டி வருகிறது. தமிழ்நாட்டின் பிரச்சனைகள் தீர வேண்டுமானால் ஆட்சி மாற்றம் ஒன்றே ஒரே வழி.
வரும் சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். திமுக முக்கிய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் நடந்துள்ள டாஸ்மாக் ஊழல் இந்தியாவில் எங்கும் நடக்காத ஊழல். இந்த மோசடிக்கு மன்னிப்பு இல்லை, தண்டனை மட்டுமே. இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.