தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோ-ஆப்டெக்ஸ், தேசிய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாக உள்ளது. தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் 150 இடங்களில் இதன் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தொழில்நுட்பம், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
அவர்களின் சம்பளம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு சம்பள உயர்வு அமல்படுத்தப்பட்டது.அதன்பின்னர், ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம், வீட்டு வாடகைப்படி, நகரப் பணிக்கொடை உள்ளிட்டவை குறித்து கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநரின் பரிந்துரையை பரிசீலிக்குமாறு கைத்தறித் துறை இயக்குநர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதை கருத்தில் கொண்டு கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, சம்பளம், வீட்டு வாடகை படி மற்றும் நகர ஈட்டுப்படி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் அதாவது அலுவலக உதவியாளர் முதல் தலைமைப் பொது மேலாளர் வரை 10 நிலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் மாற்றப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்களுக்கு இணையாக வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் நகர கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றம் ஜூலை 1, 2023 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் 15 முதல் 40 சதவீதம் வரை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.