தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபென்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் சென்னையின் சாலைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் புயல் இன்று மாலை 5.30 மணியளவில் புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கியது. இதன் காரணமாக 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது லேசான மழை பெய்தாலும், பலத்த காற்று வீசுகிறது. இதனால், அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் மட்டுமே வெளியே வருமாறு பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி ஃபென்சல் சூறாவளியுடன் பெய்த கனமழையால் தமிழகத்தின் வட கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எமது மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்வதாகவும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இக்கட்டான நேரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி நம் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கவும், அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும் வலியுறுத்தினார், மேலும், “தயவுசெய்து அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். இந்த அவசரநிலையைச் சமாளிக்க மத்திய மற்றும் மாநில அமைப்புகள் அயராது உழைக்கின்றன. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றன. இந்த இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இருப்போம்.