சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரம் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைக்காலம் இல்லாத நிலையில், சில இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில், சில இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.