சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் வறண்ட வானிலை காணப்பட்டாலும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், மிக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 65 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.