சென்னை மெரினாவில் இன்று நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாததால், சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு மக்கள் நடந்து சென்றனர்.
நமது நாட்டின் பாதுகாப்புக்காக 92 ஆண்டுகளை நிறைவு செய்து 93வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது விமானப்படை. இதை கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் இந்திய விமானப்படை சார்பில் விமான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
காலை 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 2 மணி நேரம் நீடித்தது. மதியம் 1 மணியளவில் விமானப்படை சாகசம் நிறைவடைந்தது. இதில், பயங்கரவாதிகளிடம் இருந்து பணயக்கைதிகளை காப்பாற்றவும், ஹெலிகாப்டரில் இருந்து தரையிறக்கவும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்திய விமானப் படையின் போர் விமானங்களின் சாகசங்கள் மக்களைக் கவர்ந்தன. ரஃபேல், தேஜாஸ், சாரங் ஹெலிகாப்டர்கள் போன்ற விமானங்கள் வானில் பறந்து மக்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சியை காண 15 லட்சம் பேர் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையின் பல பகுதிகளில் இருந்து மக்கள் கடற்கரையை நோக்கி செல்ல தொடங்கியதால் சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரயில் நிலையம், மெட்ரோ, பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அதிகரித்தது. நிகழ்ச்சி முடிந்ததும், மக்கள் உடனடியாக தங்கள் வீடுகளுக்குச் சென்றதால், கடற்கரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
20க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை விமான சாகசத்தால் சென்னையின் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது.