சென்னை: கோவில் சொத்துக்களை அரசு திட்டமிட்டு நாசம் செய்வதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அயனாவரம் அகத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் கொளத்தூர் மீன் மார்க்கெட் கட்டுவது குறித்து தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
கோவில் இடத்தை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதை எதிர்த்து பக்தர்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், வணிக நோக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தி.மு.க., அரசு பதவியேற்றதில் இருந்து, கோவில் சொத்துக்களை பல்வேறு வழிகளில் திட்டமிட்டு அழித்து வருகிறது. ஆன்மிகப் பணிகளுக்காகவும், பக்தர்களின் வசதிக்காகவும் மட்டுமே கோயில் சொத்துக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறையினர், குத்தகை, வாடகை செலுத்தாமல் கோவில் வளாகத்தை ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை, ஒவ்வொரு கோவில் நுழைவாயிலிலும் காட்சிப்படுத்த வேண்டும் என, இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.