ஓமலூர்: ஓமலூர் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் கொத்தமல்லி சாகுபடி செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு மற்றும் சுட்டெரிக்கும் வெயிலால், கொத்தமல்லி விளைச்சல் அதிகரித்துள்ளது. விவசாயிகள் கொத்தமல்லி அறுவடையை தொடங்கியுள்ளனர். ஓமலூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கொத்தமல்லி விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.
சேலம், ஓமலூர் பகுதியில் உள்ள மார்க்கெட், உழவர் சந்தை, வாரச்சந்தைக்கு கொத்தமல்லி வரத்து அதிகரித்துள்ளதால், தொடர்ந்து விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு மூட்டை கொத்தமல்லி ரூ.30 வரை விற்பனையானது. ஆனால் தற்போது சந்தைகளில் ரூ.5 முதல் ரூ. 8-க்கு மட்டுமே விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகளிடம் நேரடியாக வாங்கும் போது ரூ.3-க்கு கொள்முதல் செய்கின்றனர். கொத்தமல்லி சாகுபடிக்கும், அறுவடைக்கும் கட்டுப்படியான விலை கிடைக்காததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனிடையே கோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் கொத்தமல்லி விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.