கரூர்: கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 12,355 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் 10,935 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
காவிரி ஆறு நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து கடந்த 30ம் தேதி இரவு 13,500 கன அடியாக உயர்த்தி காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீரானது கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வந்தடைந்து வருகிறது.
கடந்த 2 தினங்களாக பத்தாயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்த நிலையில் அவை மேலும் அதிகரித்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 12355 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
அதில் 10,935 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், 700 கன அடி தென்கரை வாய்க்காலிலும், 300 கன அடி தண்ணீர் கட்டளை மேட்டு வாய்க்காலிலும், 400 கன அடி தண்ணீர் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிலும், 20 கன அடி தண்ணீர் கிருஷ்ணராயபுரம் வாய்க்காலிலும் பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது