ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
ஆனால், மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால், ஆறுகள், ஓடைகள் வறண்டு விட்டன. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆறு, தேவதானம் சாஸ்தா கோயில் ஆறு, ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பேயனாறு, மீன்வெட்டிப்பாறை அருவி, வத்திராயிருப்பு குண்டாறு, சதுரகிரி தாணிப்பாறை அத்திக்கோவில் ஓடை, ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆறுகள் மற்றும் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தேவதானம் சாஸ்தா கோயில் அணை, ராஜபாளையம் 6-வது மைல் நீர்த்தேக்கம், பிலவக்கல் பெரியாறு, கோவிலாறு அணை, மலையடிவாரத்தில் உள்ள கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்து, அவற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் முதற்கட்ட நெல் சாகுபடி துவங்கியுள்ளதால் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.