சென்னை: ஃபென்சல் புயல் காரணமாக சென்னை மாநகரில் நேற்று கனமழை பெய்ததால், சென்னை மாநகரில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. பட்டாளம் பகுதியில் 2 நாட்களில் மழைநீர் வடிந்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வங்கக் கடலில் உருவான ஃபென்சல் புயல் காரணமாக சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது.
அவற்றை மாநகராட்சி நிர்வாகம் 3 நாட்களாக அகற்றி வருகிறது. வெள்ளநீரை அகற்ற 100 குதிரைத்திறன் கொண்ட 137 நீர் இறைக்கும் இயந்திரங்கள் உட்பட 1,686 நீர் இறைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், டிராக்டர்கள் மூலம் இயக்கப்படும் 484 தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்றும் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக, வடசென்னையில் பட்டாளம் அங்காளம்மன் கோயில் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு தெருக்கள், சோழிங்கநல்லூர் மண்டலம் நீலாங்கரை கஜ்ரா கார்டன், ஈஞ்சம் பாக்கம் ராயல் என்கிளேவ், அனுமன் காலனி, உத்தண்டி பாரதி அவென்யூ, காரப்பாக்கம் ராஜீவ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் வெள்ளநீரை வெளியேற்றும் பணி நடந்தது.
காந்தி சாலை, மணலி மண்டலம் நேரு நகர் தெருக்கள், கோடம்பாக்கம் கோபாலமேனன் சாலை – அக்பராபாத் தெரு, சேத்துப்பட்டு – தாஸ்புரம், அரும்பாக்கம் பெரியார் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று பிற்பகல் நிலவரப்படி சென்னையில் மழைநீர் தேங்கிய 341 இடங்களில் 292 இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 49 இடங்களில் மழைநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று 22 சுரங்கப்பாதைகளில் எங்கும் மழைநீர் தேங்கவில்லை. மழைநீர் தேங்கிய பகுதிகளில் 2 நாட்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. நேற்று 200 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன. புயலால் மெரினா வளைவு சாலையில் தேங்கிய கடல் மணல் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. பட்டாளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், 2 நாட்களில் அங்கு வெள்ளம் வடிந்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அப்பகுதியில் 17 கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் மூலம் சுமார் 300 டிரிப்கள் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கூடுதலாக, 600 குதிரைத்திறன் கொண்ட 6 ராட்சத நீர் பம்புகள் வெள்ளநீரை வெளியேற்ற 24 மணி நேரமும் இயக்கப்பட்டன. மேலும், எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்குள் புகுந்த மழைநீர் வடிந்து நேற்று வழக்கம் போல் இயங்கியது.