சென்னை: டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது வாங்கியது, பார் உரிமம் வழங்கியது, மதுக்கடைகளுக்கு மதுபானம் கொண்டு செல்வது போன்றவற்றில் 1000 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக டாஸ்மாக் தலைமையகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அதிரடி சோதனை நடத்திய அமலாக்க இயக்குனரகம் அறிக்கை வெளியிட்டது.

அமலாக்க இயக்குனரகத்தின் ரெய்டு அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சிக்கு எதிரானது என்றும், அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட ரெய்டு சட்டவிரோதமானது என்றும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என அமலாக்க இயக்குனரகத்துக்கு உத்தரவிடக் கோரியும் தமிழக உள்துறைச் செயலரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், என்.செந்தில் குமார் ஆகியோர் அமலாக்க இயக்குனரகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அமலாக்க இயக்குனரகம் எந்தெந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தியது என்ற விவரங்களையும் பதில் மனுவில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.