
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வார விடுமுறையை கொண்டாட சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இதனால் கொடைக்கானலில் கடும் குளிர் நிலவுகிறது. மாலையில் தொடங்கும் இந்தக் கடும் குளிர் மறுநாள் விடியும் வரை தொடர்கிறது. இந்த வானிலை காரணமாக வார இறுதி நாளான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது.

இதனால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் பென்ஜால் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளது. அதே சமயம் கொடைக்கானலுக்கு வந்துள்ள வட மாநிலங்களைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் ஜோடிகளின் சீசனை முழுவதுமாக அனுபவித்து வருகின்றனர்.