திண்டுக்கல்: தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு மகாவீர் ஜெயந்தி, சனி, ஞாயிறு வார விடுமுறை, சித்திரை முதல் தேதியான தமிழ் புத்தாண்டு விடுமுறை என தொடர்ந்து அரசு விடுமுறை தினங்களால் சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த நான்கு நாட்களாக அதிகரித்து காணப்பட்டது.
12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள சுற்றுலாத் தலங்களை காண அதிக வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் சென்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நீண்டவரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.
ஏரிச்சாலையைச் சுற்றி வாகனங்கள் அதிகம் நிறுத்தப்பட்டிருந்தன. கடும் போக்குவரத்து நெரிசலால் ஒருநாள் சுற்றுலா வந்தவர்கள் முழுமையாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப்பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.