
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 23-ம் தேதி இரவு புகுந்த கொள்ளைக் கும்பல், அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரைக் கொன்றது. பின்னர் உள்ளே சென்று எஸ்டேட் பங்களாவில் இருந்த பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். அதன்பேரில், கோத்தகிரி போலீசார், சயான், வாளையார் மனோஜ், சந்தோஷ் சுவாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜாம்சீர் அலி, மனோஜ் சுவாமி, பிஜின் என்ற குட்டி ஆகிய 10 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவருமான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை மேற்கு மண்டல ஐஜி தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர். அப்போது, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தனிப்படை போலீசார் 316 பேரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கு சில மாதங்களுக்கு முன்பு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு புதிய மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்ற முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன், ‘கொலை, கொள்ளை நடந்த கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்கக் கோரி ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.’ அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களை, சம்பவம் நடந்த கொடநாடு பகுதியில் ஆய்வு செய்ய அனுமதிக்க முடியாது என, அரசு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி முரளிதரன், வழக்கு விசாரணையை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அரசு வழக்கறிஞர் ஷாஜகான் நிருபர்களிடம் கூறியதாவது:- அதிமுக நிர்வாகி சஜீவனிடம் நேற்று (நேற்று முன்தினம்) விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது அனைவரையும் விசாரிப்பது விசாரணை அதிகாரியின் கடமை. எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, எடப்பாடி பழனிசாமியை எதிர் தரப்பு சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த வழக்கு தற்போது விசாரணை நிலையில் உள்ளதால், யார்? யாரை விசாரிக்க வேண்டும் என்பதை விசாரணை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். தற்போது சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் தகவல் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதில், அவர்கள் அரசு சாட்சிகளாக இருந்தாலும், எதிரி சாட்சிகளாக இருந்தாலும் விசாரிக்கப்படும். சர்வதேச காவல்துறையின் விசாரணை அறிக்கை மற்றும் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முடிவுகள் இன்னும் விசாரணைக்கு வரவில்லை. விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி வேறு யாரையும் விசாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.