
சென்னை: ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில், சென்னைக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் உருவாக்குவது தொடர்பான ஆய்வுக்கு, பயணிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து, ஒத்துழைக்க வேண்டும் என, சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக் கழகம் (கும்டா) வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பின் உறுப்பினர் செயலர் ஐ.ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு 5,904 சதுர கிலோ மீட்டராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான பயணிகள் பஸ்கள் மூலம் பயணிக்கின்றனர். எனவே, பேருந்து சேவையை மேம்படுத்த ஆய்வு நடத்த உள்ளோம். இதற்காக டிஐஎம்டிஎஸ் என்ற நிறுவனம் அமர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் உள்ள பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்கள், மின்சார ரயில் நிலையங்களில் மாநகரப் பேருந்துகள், பிற அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள், தனியார் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் போன்றவற்றில் பயணிக்கும் பயணிகளிடம் ஜனவரி 15-ம் தேதி வரை கருத்துக் கேட்கப்படும்.

இதுதவிர, பேருந்தில் ஏறும், இறங்கும் பயணிகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்தில் இருந்து எத்தனை பேருந்துகள் வெளியே வருகின்றன என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு, நோயாளிகளை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் ஓட்டுநர்களின் நேர்காணலும் பதிவு செய்யப்படும்.
எனவே, இந்த ஆய்வுக்கு பயணிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இந்த ஆய்வின் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள், ஒரே டிக்கெட்டில் பயணம் செய்வதற்கான திட்டத்தை உருவாக்கவும் பயன்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.