சென்னை: மழை காரணமாக மின் தடை ஏற்பட்டதால் முழு தேர்வையும் எழுத முடியவில்லை என்று கூறி, மே 4-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை மறுதேர்வு செய்யக் கோரி 16 மாணவர்கள் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மே 4-ம் தேதி நாடு முழுவதும் இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. அன்று சென்னையில் பெய்த கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால், ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்கள், குன்றத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 2 மாணவர்கள், கே.கே.நகரைச் சேர்ந்த பத்மா சேஷாத்ரி ஆகியோர் தேர்வை முறையாக எழுத முடியவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில், மே 4-ம் தேதி நடைபெற்ற தேர்வை ரத்து செய்து மறுதேர்வுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இடைக்காலத் தடை விதித்து, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மின்வெட்டு தொடர்பான விசாரணையில் நீட் தேர்வில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதாகவும், எனவே மறுதேர்வு நடத்த முடியாது என்றும் தேசிய தேர்வுகள் முகமை விளக்கமளித்தது. இதையடுத்து, வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன், விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானது என்றும், 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருக்கும்போது மறுதேர்வுக்கு உத்தரவிட்டது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தார்.