மயிலாடுதுறை: மாரடைப்பு ஏற்பட்டு, ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்ட நிலையிலும், மயிலாடுதுறை கலெக்டர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டதை பலரும் பாராட்டினர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி. ஜூன் 26ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, மதியம் முகாம் அலுவலகத்துக்குச் சென்ற அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது. கடந்த 29ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், நேற்று மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது பேசிய கலெக்டர், ‘உங்கள் (பொதுமக்கள்) பிரார்த்தனைதான் என்னை காப்பாற்றியது, அனைவருக்கும் நன்றி’ என்றார். பொதுமக்கள் வேண்டுகோள்: முன்னதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ’அனைத்து மக்களின் மதிப்பைப் பெற்று, மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தீவிரமாக பாடுபடும் ஆட்சியர் விரைவில் குணமடைய வேண்டும்’ என மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டிருந்தனர்.