தஞ்சாவூர்: தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்காததால் மத்திய அரசு நிதி தர மறுத்ததையடுத்து 6 ஆண்டுகளுக்குப்பிறகு தமிழக அரசின் சிறப்பு நிதி மூலம் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த ஓடுதளத்தை சுற்றிலும் இரும்புகம்பி வேலியும் அமைக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அன்னை சத்யா விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் கால்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானங்கள், நீச்சல் குளம், ஹாக்கி மைதானம், கைப்பந்து மைதானம், ஸ்குவாஷ் அரங்கம், நவீன உள்விளையாட்டு அரங்கம், இறகுப்பந்து மைதானம் உள்ளிட்டவை உள்ளன.
இந்த மைதானங்களில் தினமும் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இது தவிர அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 7 கோடி மதிப்பில் உலகத் தரம் வாய்ந்த மின்னொளி வசதியுடன் கூடிய சிந்தடிக் ஓடுதளம் (செயற்கை இழை தடகள ஓடு பாதை) அமைக்க கடந்த 2017-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்காக முதல் கட்டமாக ரூ.3.5 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு பணிகள் தொடங்கின.
இதையடுத்து, தடகள ஓடுபாதையில் ரூ.1.90 கோடி மதிப்பில் தலா 80 அடி உயரத்தில் 4 மூலைகளிலும் உயர்கோபுர பன்முக விளக்குகள் அமைக்கப்பட்டன. மேலும், உலகத்தரம் வாய்ந்த செயற்கை இழை தடகள ஓடுபாதை அமைக்கும் பணி தொடங்கி, ஓராண்டுக்குள் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த செயற்கை ஓடுதள பாதை பணிகள் முடிவடைந்தவுடன் இந்த விளையாட்டு மைதானத்தில் சர்வதேச, தேசிய அளவிலான தடகளப்போட்டிகள் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது. இதற்காக ஏற்கெனவே இருந்த தடகள ஓடு பாதையை சுமார் 4 அடி உயரத்துக்கு உயர்த்தி அமைக்கப்பட்டு, தார் சாலையும் போடப்பட்டது.
இப்பணி முடிவடைந்து 6 ஆண்டுகளைக் கடந்தாலும், இன்னும் செயற்கை இழை ஓடுதள பாதை அமைக்கும் பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்த ஓடுதளம் அமைப்பதற்கான இதர பொருட்களும் வரவழைக்கப்பட்டு அது ஓடுதளத்தின் அருகேயும், பார்வையாளர்கள் அரங்கிலும் மூட்டைகளாக வைக்கப்பட்டு இருந்தன.
இதுவும் வைக்கப்பட்டு பல மாதங்களாவதால் அதுவும் வீணாகி வந்தது. ஆனால், இந்த திட்டத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு நிறைவேற்றுவதற்கு நிதி இல்லாததால், கடந்த 6 ஆண்டுகளாகக்கிடப்பில் போடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்காமல் காலதாமதம் ஏற்பட்டது. ஆனால் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தொடர்ந்து இந்த பணிகள் குறித்து கண்காணித்த போதிலும், 6 ஆண்டுகளாக பணிகள் தாமதமாக மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் இந்த திட்டம் 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிக்கப்பட்டு விட்டது. எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு தனது சொந்த நிதியின் மூலம் முடித்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், இத்திட்டம் தொடங்கப்பட்டபோது ரூ.7 கோடிக்கு மதிப்பிடப்பட்டாலும், தற்போதைய நிலையில் மொத்தத்தில் கிட்டத்தட்ட ரூ. 10 கோடி தேவை என மதிப்பிடப்படுகிறது. இப்பணியை முடிப்பதற்கு மேலும் ரூ. 5.50 கோடி தேவைப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, சிறப்பு நிதி மூலம் பணிகளை தொடங்க உடனடியாக உத்தரவிட்டது. அதன்படி தற்போது ரூ.5.50 கோடி மதிப்பில் பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது ஓடுதளத்தில் செயற்கை இழை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வடமாநில தொழிலாளர்கள இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ. டி.கே.ஜி.நீலமேகத்தின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஓடுதளத்தை சுற்றிலும் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் ரூ.1 கோடியே 5 லட்சம் செலவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த செயற்கை இழை ஓடுதள பாதையை சுற்றிலும் இரும்பு வலைகளுடன் கூடிய தடுப்புகள் 7 அடி உயரத்துக்கு அமைக்கப்படுகிறது. மேலும் ஓடுதளத்தின் மேல்புறத்தில் ஆடிட்டோரியமும் அமைக்கப்படுகிறது. மேலும் மேல்புறத்தில் 2 வாயில்களும், கீழ்புறத்தில் அவசர வழி ஒன்றும், ஆம்புலன்சு உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்வதற்கான ஒரு வழியும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் இந்த மாத்துக்குள் முடிக்கப்பட்டு அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.