திருப்பூர்: இந்து கோவில் நிலங்களில், 200 கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதற்கு, இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை:
பக்தர்களிடம் இருந்து பல்வேறு கட்டணங்களை வசூலிக்கும் அறநிலையத்துறை, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களில் 198 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கனிமங்கள் திருடப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கனிம வளங்கள் சூறையாடப்படும் வரை வேடிக்கைக்காக மட்டுமே இருந்த அறநிலையத்துறையின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. அதிகாரிகளின் உதவியின்றி வளங்களை சூறையாட முடியாது. கோவில்களின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள வளங்களை கொள்ளையடித்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
இனிமேலாவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.