ராமேஸ்வரம்: இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததையடுத்து, ஜூன், 15-ம் தேதி முதல், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கடந்த 10 நாட்களில் மட்டும் இலங்கை கடற்படையினர் புதுக்கோட்டை, ராமேஸ்வரம், நாகப்பட்டினத்தில் இருந்து 5 படகுகளை பறிமுதல் செய்து தமிழக மீனவர்கள் 36 பேரை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
மேலும், விசைப்படகு ஒன்று சுற்றி வளைக்கப்பட்டதில், இலங்கை கடற்படையின் ரோந்துப் படகில் இருந்த ரத்நாயக் என்ற ராணுவ வீரர், எதிர்பாராதவிதமாக கடலில் விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து நேற்று 550 விசைப்படகுகளில் 2500-க்கும் மேற்பட்டோர் கடலுக்கு சென்றனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு முன், சர்வதேச கடல் எல்லையில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, மீன்வளத்துறை அதிகாரிகள், ஒலிபெருக்கியில், ‘இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம்’ என, தொடர்ந்து அறிவித்தனர்.
மேலும், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அனைவரும் ஆதார், மீனவர் அடையாள அட்டை நகல் எடுத்துச் செல்லவும், அனுமதி டோக்கன் பெறவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.