ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று (ஆக.14) ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 8-ம் தேதி அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்ட்டின் ஆகியோருக்கு சொந்தமான 4 நாட்டுப் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 35 மீனவர்களைக் கைது செய்தனர். 35 மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் ஆகஸ்ட் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து அவர்கள் புத்தளம் வாரியபொல சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். அவர்களது போராட்டம் 5-வது நாளாக புதன்கிழமையும் தொடர்கிறது.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக இருநூறுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் பாம்பனில் ஆழம் குறைந்த நீரில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஆகஸ்ட் 20-ம் தேதி பாம்பன் பாலம் அருகே சாலை மறியல் நடத்தப் போவதாக நாட்டுப்படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர்.