கோவை: கோவையை அடுத்த பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. வெள்ளியங்கிரி ஆண்டவர் 7-வது மலை உச்சியில் சுயம்பு லிங்கமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பிப்ரவரி முதல் மே இறுதி வரை பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
அதன்படி இன்று வன அலுவலர் சுசீந்திரன் மலைப்பாதையை திறந்து வைத்தார். வெள்ளியங்கிரி மலை மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பகுதியில் இருப்பதால், யானைகள், சிவப்பு நாய்கள், ஓநாய்கள், புலிகள், சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், பாம்புகள் போன்றவை அங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரவில்தான் மலை ஏறத் தொடங்குகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் உடமைகளை சரிபார்த்த பிறகே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுகின்றனர். இந்த கோவிலுக்கு கோயம்புத்தூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.