கோவை: இந்த ஆண்டு மூன்றாவது முறையாக பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை உள்ளது. கோவை மாநகராட்சிக்கான பில்லூர் 1 மற்றும் பில்லூர் 2 ஆகிய கூட்டு குடிநீர் திட்டங்கள் பில்லூர் அணையை மையமாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், பில்லூர் அணை அருகே பவானி ஆற்றை மையமாக வைத்து குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பில்லூர் அணை மற்றும் பவானி ஆற்றை மையமாக வைத்து 10க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 100 அடி மற்றும் கேரளா மற்றும் நீலகிரி மலை காடுகளை அதன் நீர்ப்பிடிப்பு பகுதியாக கொண்டுள்ளது. இதில், 97.5 அடியை கடந்தால், பில்லூர் அணை நிரம்பியதாக கருதப்படும். இதையடுத்து 4 மதகுகள் மூலம் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்.
நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது, பில்லூர் அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. பில்லூர் அணை கடந்த ஜூன் 27ஆம் தேதி முதல் முறையாகவும், இம்மாதம் 16ஆம் தேதி 2வது முறையாகவும் நிரம்பியது. இதையடுத்து நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பில்லூர் அணை மூன்றாவது முறையாக இன்று (ஜூலை 26) நிரம்பியது.
இதையடுத்து அணையின் 4 மதகுகள் வழியாக பவானி ஆற்றில் காலை 11 மணி முதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சிறுமுகை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கடலோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
யாரும் ஆற்றுக்குள் செல்லவோ, பரிசல் வழியாக கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.