சென்னை: ஸ்க்ரப் டைபஸ் என்பது ஒரு வகை பாக்டீரியா தொற்று. ரிக்கெட்சியா எனப்படும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகள், பூச்சிகள் மற்றும் உயிரினங்கள் மனிதர்களைக் கடிக்கும்போது, அவை ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோயை உருவாக்குகின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் முக்கிய அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, சோர்வு, சொறி, உடல் அரிப்பு ஏற்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ பரவுவது மிகவும் பொதுவானது. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் இந்த தாக்கம் காணப்படுகிறது. விவசாயிகள், புதர் மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள், மலையேறுபவர்கள், கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ELISA இரத்த பரிசோதனைகள் மற்றும் மூலக்கூறு சோதனைகள் மூலம் நோயைக் கண்டறியலாம். ‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் பிறகும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால், நரம்பு வழியாக திரவங்களை செலுத்தி, மேம்பட்ட சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். எனவே, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.