தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: புதுக்கோட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து எல்லை தாண்டி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 13 பேரை கைது செய்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையின் அத்துமீறல் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 40க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தொடர் கைதுகள்.
எனவே, தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும்போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் நாடகத்தை கைவிட்டு, மத்திய அரசுக்கு தகுந்த அழுத்தம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.