சென்னை: பிஎச்டி படிப்புக்கான தகுதித் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சித் துறைத் தலைவர் மாணிக்கவாசகம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பிஎச்டி பட்டப்படிப்புக்கு நெட்-யுஜிசி தேர்வை கட்டாயமாக்கிய மத்திய பாஜக அரசை கண்டித்து சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை மாநில தலைவர் மாணிக்கவாசகம் தலைமையில் நேற்று சத்தியாகிரக உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதில் 50-க்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாணிக்கவாசகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பிஎச்.டி.க்கு நெட்-யுஜிசி நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி மார்ச் 24-ம் தேதி பாஜக அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது மாணவர்களின் கல்விக் கனவைப் பறிக்கும் செயலாகும். நீட் நுழைவுத் தேர்வால் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிஎச்டி மற்றும் பட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வை கொண்டு வந்துள்ள பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், இதுபோன்ற நுழைவுத்தேர்வுகளை நடத்த அனுமதிக்க மாட்டோம் என, முதல்வர் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.