சென்னை: மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் மேற்கொள்ள தமிழக அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுரங்கப் பணிகளுக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது என்றும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு சுரங்க உரிமம் வழங்கப்பட்டது. இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். முதல்வர் ஸ்டாலினின் உறுதியான நடவடிக்கையை மக்கள் ஏற்றுக்கொள்வதை சகித்துக்கொள்ள முடியாத சிலர், சுரங்க உரிமத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
மேலும், இந்த உரிமம் வழங்குவதற்கு முன் மாநில அரசின் கருத்துகளை கேட்பதாக மத்திய அரசும் தவறான தகவலை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 2023-ல், முக்கிய கனிமங்களை ஏலம் விடுவது தொடர்பாக கனிம கொள்கையில் செய்யப்பட்ட திருத்தங்களை மத்திய அரசு அறிவித்தது. உடனே அந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மத்திய சுரங்கத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். அதில், தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவித்தேன். ஆனால், நவ., 2-ல், மத்திய சுரங்கத்துறை அமைச்சர், எங்களின் ஆட்சேபனைகளை நிராகரித்து, தேவையான சட்ட திருத்தங்கள் செய்த பிறகே ஏலம் நடத்தப்படும் என்றும், இந்த கொள்கைக்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், தேசிய தேவைகளை கணக்கில் கொள்ள வேண்டும்.
இதையடுத்து, மேலூர் பகுதியில் உள்ள நிலங்கள் குறித்த விவரங்களை மத்திய அரசிடம் கேட்டபோது, உத்தேச பகுதியில் உள்ள அரிட்டாபட்டி பகுதி பல்லுயிர் பெருக்கத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் என்பதைச் சுட்டிக்காட்டினோம். இவை எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாத மத்திய அரசு, தனியார் நிறுவனத்துக்கு டங்ஸ்டன் உரிமத்தை வழங்கியது. தற்போது பொதுமக்களின் எதிர்ப்பாலும், முதல்வரின் உறுதியான நிலைப்பாட்டாலும் அச்சமடைந்த மத்திய அரசும், இரட்டை வேடம் போடும் கட்சிகளும் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பவும், சுரங்க ஏலத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.