சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம், பாமக சார்பில் நேற்று நடந்தது.
வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அத்துமீறி கைது செய்யப்பட்டு, ஆண்டுக்கணக்கில் சிறை தண்டனையும், கோடிக்கணக்கில் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இருந்து நேற்று இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு பேரணி நடத்தினர்.
அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மீனவர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், மனு கொடுக்க 5 பேரை மட்டும் அழைத்து சென்றனர். அப்போது பாமக பொருளாளர் திலகபாமா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக மீனவர்கள் 162 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 192 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபடும் படகுகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.
பிரதமர் வழங்கிய படகுகள் வேறு நாட்டில் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இந்திய – இலங்கை மீனவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் மீன்பிடித்தனர்.
இதே போன்றதொரு நிலை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். இரு நாட்டு பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து மீனவர்கள் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்போதெல்லாம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றார்.