ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 படகுகளில் 3,000 மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். நேற்று காலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெயராஜ், ராஜா, கீதன் ஆகியோருக்கு சொந்தமான 3 படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அந்த படகுகளில் இருந்த 23 மீனவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில், மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதுறையில் மீனவர் சங்க பிரதிநிதிகள் அவசர கூட்டம் நடந்தது. மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவித்து தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை பாம்பன் சாலை பாலத்தில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 65 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்து 485 மீனவர்களை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.