நாகப்பட்டினம்: இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களை கற்களால் தாக்கி 600 கிலோ மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களைப் பறித்துச் சென்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட படகுகளில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, செந்திலுக்குச் சொந்தமான படகை இலங்கை கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்து, படகில் இருந்த 5 மீனவர்கள் மீது கற்களை வீசினர். பின்னர், படகில் ஏறிய இலங்கை கடற்கொள்ளையர்கள் அங்கிருந்த மீனவர்களை இரும்பு கம்பிகளால் தாக்கி, படகில் இருந்த வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில், படகு உரிமையாளர் செந்தில் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக கரை திரும்பிய மீனவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதேபோல், செருதூர் சுரேஷுக்குச் சொந்தமான படகில் இருந்த மீனவர்களும் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதால், அவர்களும் அவசரமாக கரை திரும்பினர்.
செருதூர் மீனவர்களின் இரண்டு படகுகளில் இருந்து சுமார் 600 கிலோ மீன்பிடி வலைகள் மற்றும் பிற உபகரணங்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் நாகை மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.