தமிழகத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும். இல்லையெனில் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதிக் கூட்டணி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
தமிழகத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவே இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம். இது ஒரு அடையாளப் போராட்டம். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களைப் பற்றிய தகவல்கள் இருந்தால் மட்டுமே, அதற்கேற்ற திட்டங்களை உருவாக்க முடியும். அதுதான் சமூக நீதி. மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உரிமை உண்டு. அதன்படி, பீகார், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு மாநில உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தடை விதிக்கவில்லை. ஆனால், தமிழகத்திற்கு மட்டும் அதிகாரம் இல்லை என்று சட்டசபையிலேயே முதல்வர் ஸ்டாலின் பொய் கூறியுள்ளார். ஆடு, மாடுகள், நாய்கள் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் கூட கணக்கிடப்படுகின்றன. ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இலவச பேருந்து பயணம் மற்றும் பெண்களின் உரிமைகளை வழங்குவதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதே சமயம், சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சரியான இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் வகையில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் மனநிலையில் முதல்வர் இல்லை.
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு காப்பாற்றப்பட வேண்டுமானால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம். எனவே, பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் அறிவிக்க வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக தொடர் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி, இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து, தாமாகா துணைத் தலைவர் விடியல் சேகர், அமமுக துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கே.சி. திருமாறன், புரட்சி தமிழகம் – பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி உட்பட பலர் பேசினர்.