பெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது. இந்நிலையில், தொழிற்சங்க அங்கீகாரம் கோரி போராடிய சிஐடியு தொழிலாளர்கள் மீது தொழிற்சாலை நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இப்பிரச்னை தொடர்பாக கடந்த மாதம் 31-ம் தேதி நிர்வாகத்தை சந்திக்க முயன்றதால், தொழிற்சாலையில் உரிய நேரத்தில் வேலை செய்யாமல், அத்துமீறி நடந்து கொண்டதாக 3 தொழிலாளர்களை நிர்வாகம் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து நோட்டீஸ் கொடுத்ததுதான் இதற்கு காரணம். இதனால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க கோரியும், தொழிலாளர்கள் மீதான நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடக்கோரியும் சிஐடியு தொழிலாளர்கள் 13-வது நாளாக பணி புறக்கணிப்பு செய்து தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பிரச்னை தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகே சாம்சங் தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகே 13-வது நாளாக நடைபெற்று வரும் உள்ளிருப்புப் போராட்டத்தை சுமுகமாகத் தீர்க்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.