சென்னை: எஸ்.வி.சேகருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்தும், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. இருப்பினும் சிறை தண்டனையை 90 நாட்கள் நிறுத்தி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதுாறு கருத்து பதிவிட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து, 2018ல் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக, சேகருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த, எம்.பி., – எம்.எல்.ஏ-.,க்களுக்கான சென்னை சிறப்பு நீதிமன்றம், சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15,000 ரூபாய் அபராதம் விதித்து, கடந்தாண்டு பிப்ரவரி 19ல் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சேகர் மேல்முறையீடு செய்துஇருந்தார். இந்த வழக்கில், மறு உத்தரவு வரும் வரை தண்டனையை நிறுத்தி வைத்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கில், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வெங்கடேஷ் மகாதேவன், அரசு தரப்பில் வழக்கறிஞர் வினோத்குமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
நீதிபதி பி.வேல்முருகன் தீர்ப்புஅளித்தார். அப்போது, எஸ்.வி.சேகருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்தும், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
அப்போது, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், இந்த வழக்கில் பிறப்பித்த தீர்ப்பை நிறுத்தி வைக்கும்படி, சேகர் தரப்பில் கோரப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, 90 நாட்கள் தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என, காவல் துறைக்கு உத்தரவிட்டார்.