சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் தென்னிந்திய பகுதிகளில் நீர்வளம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்த கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தென் மாநில நீர் மேலாண்மை நிபுணர்கள், அரசு அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு, தங்கள் மாநிலங்களில் உள்ள நீர்வளம், மேலாண்மை தொடர்பான திட்டங்கள், தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
தொடக்க கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக நீர்வளத் துறைச் செயலர் கே.மணிவாசன் பேசியதாவது:- தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன. நீர் மேலாண்மையில் எங்களுக்கு 2 பிரச்னைகள் உள்ளன. ஒன்று, தேவைப்படும் நேரத்தில் தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. மற்றொன்று அதிக மழையால் ஏற்பட்ட வெள்ளம். இவற்றை சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது எந்தெந்த இடங்களில் எவ்வளவு மழை பெய்யும் என்பதை ஓரளவு துல்லியமாக கணிக்க முடிகிறது. இருப்பினும், தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழையை கணிப்பது 25 சதவீதம் கடினம் என முன்னறிவிப்பாளர்கள் கூறுகின்றனர். பருவநிலை மாற்றம், காற்றின் திசை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதற்குக் காரணம். இதனால் சில நேரங்களில் எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்து வருகிறது. இல்லையெனில் மழை குறையும். எனவே, துல்லியமான கணிப்புகளைச் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இது தவிர சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் தொழில்நுட்பங்கள் மூலம் நீர் மேலாண்மையை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி நீர்வளத்துறை மூலம் ரூ.68 கோடி மதிப்பீட்டில் நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பிரத்யேக செல்போன் செயலியும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் இன்னும் 3-4 மாதங்களில் முடிவடையும். இது செயல்பாட்டுக்கு வரும்போது, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எவ்வளவு மழை பெய்கிறது, எவ்வளவு தண்ணீர் சேமிக்கப்படுகிறது, ஏரிகளில் உள்ள நீர்மட்டம், வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளிட்ட நிகழ்வு நேர விவரங்களை பொதுமக்கள் உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
இதுதவிர, ஜப்பான் நாட்டின் சர்வதேச நிதியுதவியுடன் சென்னை மாநகரில் நீர் மேலாண்மை மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் தமிழக நீர்வளத்துறை 2 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள முறையான ஆய்வு அடிப்படையிலான திட்டமிடல் அவசியம்.
இதில் உடனடி மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள், மழையின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளின் விவரங்கள், அதை தடுக்கும் நடவடிக்கைகள், கால்வாய்களை அகலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கியிருக்கும்.
உதாரணமாக, கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தை விரிவுபடுத்துவதும், பக்கிங்காம் கால்வாயை வங்காள விரிகுடாவுடன் பல இடங்களில் இணைக்கும் திட்டமும் அடங்கும். அதேபோல விவசாய நடவடிக்கைகளுக்கும் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. அவற்றையும் முறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். குறைந்த நீரைக் கொண்டு அதிக மகசூல் தரும் சந்தைப் பயிர்களைக் கண்டறிந்து அவற்றை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
மேலும், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை வலுப்படுத்தும் பணியும் சம்பந்தப்பட்ட துறைகளால் முடுக்கி விடப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் உள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளன. ஜிபிஎஸ் உதவியுடன் நீர்நிலை எல்லைகள் வரையறுக்கப்படுகின்றன. இதன் மூலம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றி புதிய ஆக்கிரமிப்புகளை தடுக்க முடியும்.
மேலும் கடந்த ஆண்டு மழை பாதிப்பை கருத்தில் கொண்டு நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளுக்கு தமிழக அரசு ரூ.630 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் ஆறுகள், கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன,” என்றார்.