சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 40-60 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது.

மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி, வேலூரில் 104 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், மதுரை மாநகரம், ஈரோட்டில் தலா 103 டிகிரி, கடலூர், திருச்சி, திருத்தணி, தூத்துக்குடி, பரங்கிப்பேட்டை மற்றும் சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் தஞ்சாவூரில் தலா 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.