புதுக்கோட்டை: மேற்கு வங்கத்தில் வாகன விபத்தில் பலியான புதுக்கோட்டை ராணுவ வீரரின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள வடக்கு பொன்னன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி ரெங்கசாமி – விஜயலெட்சுமி தம்பதியின் மகன் ராஜேஷ்குமார் (37). இவர் இந்திய ராணுவத்தில் அவல்தாராக மேற்கு வங்க மாநிலத்தில் வேலை செய்து வந்தார்.
இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி வினோதினி (36) என்ற மனைவியும், ஹர்சிகா (9), வர்சிகா (2) இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 25ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பணியின் போது ஏற்பட்ட வாகன விபத்தில் படுகாயமடைந்து புனேயில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 26ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்த ராணுவ வீரர் ராஜேஷ்குமாரின் உடல் இன்று (28.05.2026 – வியாழக்கிழமை) அவரது சொந்த ஊரான வடக்கு பொன்னன்விடுதி கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டை காக்க ராணுவத்திற்குப் போன ராஜேஷ்குமாரை நினைத்து கிராமமே பெருமைப்பட்டது. ஆனால் இப்படி மனைவி பச்சிளங்குழந்தைகளை தவிக்கவிட்டுட்டு இந்த சின்ன வயதிலேயே உயிரிழந்திருப்பதை மனம் ஏற்கவில்லை என்று கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.