சென்னை: தெற்கு ரயில்வேக்கான முதல் ஏசி மின்சார ரயில் சென்னை ஐசிஎப் ஆலையில் பிப்ரவரி முதல் வாரத்தில் தயாராக இருந்தது. 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில் சமீபத்தில் சென்னை ரயில்வே கோட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ரயிலில் 1,116 பேர் அமர்ந்தும், 3,798 பேர் நின்று கொண்டும், மொத்தம் 4,914 பேர் பயணம் செய்யலாம்.
அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இதில் தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் மற்றும் அறிவிப்பு வசதிகள் உள்ளன. அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இந்த ரயில் தாம்பரம் யார்டில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கடற்கரை – தாம்பரம் விரைவு சாலையில், ஏசி மின்சார ரயில் 60 கி.மீ., வேகத்தில் சோதனை செய்யப்பட்டது.
தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ரயிலை பார்வையிட்டு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். சோதனை ஓட்டம் திருப்திகரமாக இருப்பதாகவும், விரைவில் ரயில் சேவை தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.