சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 44 பிரிவுகளில் மொத்தம் 3,800 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் 10,000 முதல் 12,000 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தினமும் 450 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் தவிர பிற மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்கான செலவுகள் காப்பீட்டு நிதியில் இருந்து சரி செய்யப்படுகிறது. காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெறப்படும் நிதியானது சிகிச்சைச் செலவுகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை, மருத்துவமனை மேம்பாடு எனப் பல்வேறு விகிதாச்சாரங்களில் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காப்பீட்டு நிதி முறையாக ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆய்வின்போது, சில துறைகளில் முதல்வர் காப்பீட்டு நிதியைப் பயன்படுத்துவதில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.