சென்னை: அஞ்சல் துறையில் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் வரும் 4-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று மத்திய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அஞ்சல் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் 2.0 சென்னை மத்திய அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் 4-ம் தேதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்ப மென்பொருள் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கையின்படி நாட்டின் வளர்ச்சிக்கு துணைபுரியும். இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையை தடையின்றியும் பாதுகாப்பாகவும் செயல்படுத்த, 2-ம் தேதி பரிவர்த்தனை இல்லாத நாளாக திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, சென்னை மத்திய அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் எந்த அஞ்சல் சேவையும் மேற்கொள்ளப்படாது. புதிய தொழில்நுட்பத்தின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக இந்த தற்காலிக சேவை இடைநிறுத்தப்படுகிறது.
அனைத்து மக்களும் சிறந்த மற்றும் வேகமான டிஜிட்டல் சேவைகளைப் பெற வழி வகுக்கும் வகையில் இந்த தவிர்க்க முடியாத ஒரு நாள் சேவை இல்லாத நாள் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த சேவையற்ற நாளைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தங்கள் அஞ்சல் சேவைகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு அஞ்சல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.