புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் நாளை (31ம் தேதி) தொடங்குகிறது. வரும் 2ம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். புதுச்சேரி 15வது சட்டப் பேரவையின் 5வது கூட்டத்தொடர் நாளை காலை 9.30 மணிக்கு (31ம் தேதி) ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதையடுத்து, 2024-2025ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 2ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது.
நிதிப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு தேஜா கூட்டணி அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் என்பதால், பல்வேறு சலுகைகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனிடையே தேஜ கூட்டணிக்குள் உரசல் நீடிப்பதால், சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்தே பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை கூட்டப்பட்ட பின், பேரவையின் செயற்குழு கூடி, சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். தொடர்ந்து 2 வாரம் சட்டசபையை நடத்தும் திட்டம் இருப்பதாக தெரிகிறது. இதனிடையே, ஆளுநர் உரைக்குப் பிறகு சிபி ராதாகிருஷ்ணன் புதுவையில் இருந்து விடைபெறும் நிலையில், புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கே.கைலாசநாதன் வரும் 2ஆம் தேதி மாலை முறைப்படி பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.