தஞ்சாவூர்: இன்ஜின் பழுதானதால் கஞ்சியில் ஒரு மணி நேரமாக நடுவழியில் நின்ற ரயிலால் பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம், தஞ்சை வழியாக திருச்சிக்கு தினமும் பயணிகள் ரயில் ( வண்டி எண்.16833) இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றுகாலை 8.10 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து ஏராளமான பயணிகளை ஏற்றிக்கொண்டு ரயில் திருச்சிக்கு புறப்பட்டது.
அந்த ரயில் காலை 9.40 தஞ்சை ரயில் நிலையத்திற்கு சற்று முன்பாக சாந்த பிள்ளைகேட் பகுதியில் வந்தபோது திடீரென என்ஜின் கேபிள் பழுதால் அங்கேயே நின்றது. உடனே ரயில் ஓட்டுநர் அதனை சரி செய்ய முயன்றும் முடியாததால் நடுவழியிலேயே ரெயில் நின்றது.
இதனால் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என ரயிலில் இருந்த 500-க்கும் மேற்பட்ட பயணிகள் செய்வதறியாது இருந்தனர்.
தஞ்சையில் இறங்க வேண்டிய பயணிகள் அப்படியே தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்றுவிட்டனர். மாறாக பூதலூர் ,திருச்சிக்கு செல்வோரில் சிலர் நேரம் ஆகிவிட்டதால் இறங்கி பஸ்ஸில் சென்றனர்.
மீதம் உள்ளவர்கள் ரயிலில் இருந்தனர். மேலும் அந்த நேரத்தில் நாகூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரயிலில் சிலர் ஏறி சென்றனர்.
இதற்கிடையே ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து என்ஜின் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பழுது சரி பார்க்கும் பணி நடந்தது. இதையடுத்து பழுதான என்ஜின் அகற்றப்பட்டு மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு ரயிலில் பொருத்தப்பட்டது. அதன் பின்னர் 1 மணி நேர கால தாமதத்திற்கு பிறகு ரயில் புறப்பட்டு திருச்சிக்கு சென்றது. இந்த தாமதத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர் .