மதுரை: மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் மூட்டைக்குள் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் காயங்களுடன் இருந்ததை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு எதிர்ப்புறம் ஈச்சனேரி பகுதியில் மூட்டையில் மனித உடல் இருப்பதாக பெருங்குடி காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த பெருங்குடி போலீசார், ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டார். அந்த மூட்டைக்குள் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் காயங்களுடன் இருந்தும் தெரியவந்தது.
இறந்து நான்கு நாட்களாக அழுகிய நிலையில் இருப்பதும் முகங்கள் சேதமடைந்து அடையாளம் காண்பது சிரமம் இருப்பதாகவும், கைரேகையைக் கொண்டு அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.