கொடைக்கானல்: தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளால் குவிந்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களில் மட்டுமே சுற்றுலா பயணிகள் அதிகமாக காணப்பட்டனர். இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறைகள் என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
வாரத்தின் இறுதி நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இடைப்பட்ட நாட்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வறண்ட நிலையும் காணப்பட்டதால் சோர்வடைந்திருந்த சிறு குறு வியாபாரிகள் தற்பொழுது சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நேற்று முதற்கொண்டே வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமான சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினர். இவர்கள் மேல்மலை கிராம பகுதிகளான மன்னவனூர், பூம்பாறை, பூண்டி, கிளாவரை போன்ற பகுதிகளிலும் அதிகமான சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.
இதே போல் பசுமை பள்ளத்தாக்கு, வனத்துறை சுற்றுலா தளங்களான தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடு, மோயர் சதுக்கம் ஆகிய இடங்களிலும், பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, படகு இல்லங்கள் போன்ற பகுதிகளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஏரிச்சாலை பகுதிகளில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். இருப்பினும் ஒரு சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
குறைவான எண்ணிக்கையில் போக்குவரத்து காவலர்கள் உள்ளதால் போக்குவரத்தை சீர் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. குறைவான எண்ணிக்கையிலான போலீசார் போக்குவரத்தை சீர் செய்வதில் முழு கவனம் செலுத்தினர். தொடர் விடுமுறை நாட்களில் போக்குவரத்து காவலர்களை அதிகப்படுத்துவதை விட நிரந்தரமான எண்ணிக்கையில் காவல் துறையினர் போக்குவரத்துக் காவலர்களை அதிகமாக எண்ணிக்கையில் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலில் இதமான வெயில் மற்றும் ரம்யமான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் கும்பக்கரை அருவியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர். அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.