மகாவீர் ஜெயந்தி, சனி, ஞாயிறு வார இறுதி, தமிழ் புத்தாண்டு விடுமுறை என தொடர் அரசு விடுமுறை காரணமாக கடந்த 4 நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்துள்ளனர். கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மோயர் பாயின்ட், குணா குகை, தூண் பாறை, பைன் வனம், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் காணப்பட்டனர். கொடைக்கானலில் நேற்று வாகனங்கள் அதிகளவில் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் கொடைக்கானலுக்கு ஒரு நாள் சுற்றுலா வந்தவர்கள் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

சுற்றுலா பயணிகள் கூறுகையில், “கொடைக்கானலில் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. எனவே, பார்க்கிங் வசதியை மேம்படுத்த வேண்டும்’ என்றனர். கொடைக்கானலில் நேற்று அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சமாக 19 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.