புதுச்சேரி: வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நேற்று கரையைக் கடந்தது. புயல் காரணமாக புதுச்சேரியில் சூறாவளி காற்றுடன் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் புதுச்சேரியின் நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. குறிப்பாக கனகன் ஏரி அருகே மருது நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மேல்தளங்களில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். உப்பனாறு கால்வாயை ஒட்டியுள்ள கோவிந்தசாலை குபேர் நகர், அந்தோணியார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்கள் தண்ணீரில் தத்தளித்தனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று படகு மூலம் பொதுமக்களை மீட்டனர். தொடர் மழையால் லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சீகல்ஸ் மாநாட்டு மையம் போன்ற பகுதிகளில் சுவர் இடிந்து விழுந்தது. லாஸ்பேட்டை உயர்நிலை மற்றும் தொழில்நுட்பக் கல்வி அலுவலகம், நாவலர் அரசுப் பள்ளி, லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம், பாரதிதாசன் மகளிர் கல்லூரி அருகே உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன.
கிழக்கு கடற்கரை சாலையில் கொக்கு பார்க் சிக்னல் அருகே புதிதாக கட்டப்பட்ட போக்குவரத்து சிக்னல் சாலையில் விழுந்து சேதம் ஏற்பட்டது. இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு அவசரகால கட்டுப்பாட்டு அறையும் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. நேற்று இரவு வீசிய பலத்த காற்றில் 2-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு உணவு வழங்குதல், சாலையில் விழுந்த 100-க்கும் மேற்பட்ட மரங்கள், கிளைகளை வெட்டி அகற்றுதல், சீரமைத்தல் உள்ளிட்ட நிவாரணப் பணிகளில் மாநிலம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5,000 அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அறுந்து விழுந்த மின்கம்பிகள் மற்றும் சேதமடைந்த மின்கம்பங்கள். பேரிடர் மீட்புப் படையினர், துணை ராணுவப் படையினர் மற்றும் தன்னார்வலர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலூர்-புதுச்சேரி சாலையில், கிருமாம்பாக்கம்-பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே, சாலையோர வாய்க்காலில் மழைநீருடன் இடுப்பளவு தண்ணீர் கலந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கிருமாம்பாக்கம், கன்னியாகோயில் பகுதிகளில் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வேலை, மருத்துவம் என பல்வேறு தேவைகளுக்காக இரு பகுதிகளுக்கும் செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதேபோல் பல இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பாகூர், கரையாம்புத்தூர் போன்ற இடங்களில் மழைநீரால் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1995 முதல் 2024 வரை நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 48.4 செ.மீ மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 2004 அக்டோபர் 31-ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 21 செ.மீ மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.